Breaking News

முதலுதவி, முதலுதவிப் பெட்டி

 


முதலுதவி

முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக்கொடுக்கும் முதற்கட்டக் கவனிப்பாகும்.

சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயப்பட்ட நபர்க்கு அளிக்கப்படும்.

இது மருத்துவத்துறையில் சிறப்புடைய நிபுணர் - அல்லாத எனினும் பயிற்சி பெற்ற ஒரு நபரால் அளிக்கப்படும்.

சில கட்டுப்படுத்தக்கூடிய நோய்கள் மற்றும் சிறிய காயங்களுக்கு முதலுதவி அளித்த பிறகு மருத்துவத் தலையீடு தேவையில்லாமலே போகலாம். முதலுதவி பல சமயங்களில் உயிர் காப்பாற்றுகிற திறனைக் கொண்டது.

ஒருவர் குறைந்த உபகரணங்களைக் கொண்டே செயல்படுத்தும் வகையில் முதலுதவி அமைய வேண்டும்.

விளையாட்டு, வாகன விபத்துகள், சண்டைகள், தவறி விழுதல், இருதய உபாதைகள், மாசு நிறைந்த சூழ்நிலையில் வாழ்தல், இரசாயன கலவைகளின் பாவனை, தவறான மின் பாவனை, கட்டுப் பாடற்ற நெருப்பு பாவனை, இயற்கையின் சீற்றங்கள் என்பவற்றால் எதிர்பாராத விதமாக திடீரென ஒருவரோ அல்லது பலரோ ஆபத்தான நிலைக்கு ஆளாகின்றார்கள்.

இதன் போது முதலுதவி கட்டாயமாக தேவைப்படுகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினம் பின்பற்றப்படுகின்றது.

முதலுதவியின் குறிக்கோள்

உயிரைப் பாதுகாத்தல்

நிலைமை மேலும் மோசமடையாமல் தடுத்தல்

சீக்கிரத்தில குணமளிக்க முன் ஏற்பாடு செய்தல்.

முதலுதவி செய்யமுன் கவனிக்க வேண்டியவை

முதலுதவியாளர் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.

சுற்றுச் சூழலை அவதானித்துப் பாதுக்காப்பை உறுத்திப்படுத்தல்.

நோயாளருக்கு உதவியளித்தல்.

அடிப்படை முதலுதவிக் குறிப்புகள்

முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டி எப்போதும் வீட்டில், பாடசாலை அல்லது நிறுவனத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும்.

முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யும் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளல் அவசியம்.

அவசர சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக மூச்சுவிடுவதற்குத் தேவையான சூழ்நிலையினை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில் செயற்கை சுவாசத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறும் நிலையிலும், பாதிக்கப்பட்ட நபர் விஷம் உட்கொண்ட நிலையிலும், இதய மற்றும் சுவாச இயக்கங்கள் நிற்பது போன்ற நிலையிலும் மிகவும் வேகமாக செயல்படுதல் அவசியம். ஒவ்வொரு விநாடியும் மிக மிக முக்கியமானதாகும்.

பாதிக்கப்பட்டவர்கள் கழுத்திலோ அல்லது பின்புறத்திலோ காயம் இருந்தால் உடனே மருத்துவ வசதி அளிக்க வேண்டும்.

வாந்தி எடுத்து ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டால், ஒரு பக்கம் சாய்த்துப் படுக்க வைத்து வெது வெதுப்பாக வைப்பதற்கு போர்வை அல்லது கம்பளியால் போர்த்தி விட வேண்டும்.

முதலுதவி அளிக்கும் போதே மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

அமைதியாய் இருந்து பாதிக்கபட்டவருக்கு மனதைரியத்தை அளிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருக்கும் போது திரவப்பொருட்களை எதையும் கொடுக்கக்கூடாது.

பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கு ஒவ்வாமை தரும் மருந்துகளின் குறிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்

முதலுதவிப் பெட்டி ( First Aid Box)

முதலுதவிப் பெட்டி என்பது துணைக்கலப் பொருட்களையும், கருவிகளையும் சேகரித்து வைத்து முதலுதவி அளிப்பதற்குப் பயன்படுவது ஆகும்.

சர்வதேச தரநிர்ணய அமைப்பு (ISO) சில தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் பச்சைநிறப் பின்புலம் மற்றும் வெள்ளைநிறச் சிலுவையைப் பயன்படுத்துமாறும், சில தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் வெள்ளைநிறப் பின்புலத்தில் சிவப்பு நிறத்தினாலான சிலுவையைப் பயன்படுத்துமாறும் கூறுகின்றது.

அடிப்படை முதலுதவிப் பெட்டி ஒன்றில் இருக்க வேண்டியவை

ஒரு சோடி சுத்தமான கையுறைகள்

முகக்கவசம் (Disposal facemask)

 காட்டன் ரோல்

தூய்மையான துணி

ரோலர் பேண்டேஜ்

நுண்ணிய துளைகள் கொண்ட, ஒட்டக்கூடிய டேப்

Detol

ஆயின்மென்ட்

துரு இல்லாத கத்தரிக்கோல்

குளுகோஸ்

வலி நிவாரணி  மாத்திரை (Panadol)

உயிர் காக்கும் மருந்து (Asprin)

சோப்பு , உப்புக்கரைசல்

உடல் வெப்பமானி

முதலுதவி தொடர்பில் ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய விடயங்கள்

1. அனைத்து ஆசிரியர்களுக்கும் முதலுதவி பற்றிய பயிற்சி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

2. வழக்கமான பயிற்சி முறைகளில் ஆசிரியர் முதலுதவி பற்றிய விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

3. ஆசிரியர்கள் அடிப்படையான இதயம் மற்றும் நுரையீரலுக்குரிய சுவாச மீட்சி சிகிச்சை கற்றிருக்க வேண்டும்.

4. காது, மூக்கு மற்றும் கண், மூச்சு, முறிவுகள் போன்றவை குழந்தைகளுக்கு ஏற்படும் பொழுது, அதற்கு ஏற்றவாறு முதலுதவி செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

5. சில நேரம் ரத்தம் தடைபட்டு, சுவாசம் நின்று விடும் வாய்ப்பிருக்கிறது. அப்பொழுது, உணர்வு இருக்கின்றதா? இல்லையா? என்பதை அறிய உடம்பின் மெல்லிய பகுதியில் கிள்ள வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் அவருடைய வாயை திறந்து உங்களுடைய மூச்சை செலுத்த வேண்டும். அப்படி செலுத்தும் பொழுது மூச்சடைப்பு நிற்கும்.

பாடசாலையில் முதலுதவி தேவைகள்

இரத்தப்போக்கு

தீக்காயங்கள்

ஹீட்ஸ்ட்ரோக்

மயக்கமடைதல்

தலையில் காயங்கள்

எலும்புக் காயங்கள்

தசைக் காயங்கள்

மூட்டுக் காயங்கள்

மூச்சுத் திணறல்

மயக்கம்

நெஞ்சு வலி

ஆஸ்துமா

ஒவ்வாமை எதிர்வினைகள்

சாலை விபத்து

விபத்தில் முதுகுத்தண்டு அடிபட்டு இருந்தால், அவரை மூன்று நான்கு பேர் சேர்ந்து, தட்டையான பலகையில் வைத்துத் தூக்கி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதே சிறந்தது.

சுயநினைவு இல்லை, மூச்சுவிட சிரமப்படுகிறார்கள் எனில், கழுத்தை மேல் நோக்கித் திருப்பக் கூடாது. நாக்கு உள் இழுத்துக்கொள்வதைத் தடுக்க, நாக்கைப் பிடித்து, மெலிதாகத் தூக்கிவிடவும்.கழுத்தைச் சுற்றிப்போடும் பேண்ட் இருந்தால், உடனடியாகப் போட வேண்டும்.

ரத்தம் வெளியேறுவதைத் தடுப்பது அவசியம். பஞ்சு அல்லது சுத்தமான துணியைவைத்து, உடலில் எங்கிருந்து ரத்தம் வழிகிறதோ மிகச்சரியாக அந்த இடத்தில், அழுத்திப் பிடிக்க வேண்டும்.

ரத்தப்பெருக்கு

விபத்துகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் நிற்காமல் கொட்டும்போது, முதலில் காயம் எந்தப் பகுதியில் ஏற்பட்டிருக்கிறது எனக் கண்டறிய வேண்டும். அந்தப் பகுதி ஆடையால் மூடி இருந்தால், அதனை முதலில் அகற்ற வேண்டும்.

சுத்தமான துணியை ரத்தம் பெருகும் இடத்தின் மேல் நேரடியாகவைத்து சில நிமிடங்களுக்கு அழுத்திப் பிடிக்க வேண்டும். இப்படிச் செய்வதால், காயம்பட்ட இடத்தில் ரத்தம்  உறைந்து  ரத்தப்பெருக்கைக் கட்டுப்படுத்தும்.

சிலருக்கு, காயத்தின் தன்மையைப் பொறுத்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வரை ரத்தப்பெருக்கு நிற்காது.சிலர், சில விநாடிகள் மட்டும் அழுத்திப்பிடித்துவிட்டு ரத்தம் வருகிறதா என எடுத்துப் பார்ப்பார்கள்; இது தவறு. தொடர்ச்சியாக அழுத்திப் பிடித்தவாறே மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

மயக்கம்

பசி, சோர்வு, ரத்த தானம் ஆகியவற்றால் சிலர், திடீரென மயங்கி விழுவார்கள். இது சாதாரண மயக்கமா, திடீர் இதயத்துடிப்பு முடக்கமா என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.

மயக்கம் அடைந்தவர்களை காற்றோட்டமான சூழலில் மல்லாக்க படுக்கவைக்க வேண்டும்.அவர்களின் கால்களைச் சற்று நேரம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

உயரமான இரண்டு தலையணைகளின் மேல் அவர்களின் கால்களை வைக்கலாம். இவ்வாறு செய்யும்போது, போதுமான ரத்த ஓட்டம் அவர்களின் மூளைக்குச் சென்று ஒருசில நிமிடங்களில் அவர்களுக்கு இயல்பாகவே நினைவு திரும்பிவிடும்.தலையணை இல்லாவிடில் நாற்காலியிலும் கால்களை வைக்கலாம்.

மயக்கத்தில் இருக்கும்போது உணவு ஏதும் வழங்க  கூடாது. முகத்தில் தண்ணீர் தெளிப்பதாலும் எந்தப் பலனும் இல்லை.

தீக்காயங்கள்

சிறிய அளவிலான தீக்காயங்கள், வெந்நீர் கொட்டுவதால் ஏற்படும் காயங்கள் போன்றவற்றின் மீது உடனடியாகக் குளிர்ந்த நீரையோ அல்லது  சாதாரண தண்ணீரையோ ஊற்ற வேண்டும்.

எரிகாயங்களுக்கான கிரீம்களை தடவலாம்.

கொப்புளங்கள் ஏற்பட்டால், அவற்றை உடைக்கக் கூடாது. உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

மிகச்சிறு தீக்காயங்களுக்கு மருத்துவமனை செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.

பூச்சிக் கடி, தேனி அல்லது தேள் கொட்டுதல்

தேனி கடித்தால், கடித்த இடத்தில் தேனியின் கொடுக்கைப் பிடுங்க கூடாது. அந்த இடத்தில் அழுத்தக் கூடாது.தேனியின் கொடுக்கு வளைந்து இருக்கும். பிடுங்க முயலும்போது, கொடுக்கின் நுனியில் உள்ள விஷம் உடலுக்கு உள்ளே சென்றுவிட வாய்ப்பு உள்ளது.

ஒரு மெல்லிய அட்டையை எடுத்து, தேனியின் கொடுக்கு இருக்கும் இடத்தில் வழித்துவிட வேண்டும்.வலி இருந்தால், வலி மாத்திரை வழங்க வேண்டும்.

கடித்த இடத்தில் ஐஸ் பேக் வைக்க வேண்டும். தேனி கடித்து, வெகு சிலருக்கு அலர்ஜி காரணமாக மூச்சுக்குழாய் வீக்கம் ஏற்படலாம். இதனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.ஐஸ் பேக் வைத்த பிறகு, விரைவாக மருத்துவமனை வந்து பரிசோதித்து, தேவைப்பட்டால் சிகிச்சை எடுப்பதன் மூலம், மரணத்தைத் தடுக்க முடியும்.



முதலுதவி பயிற்சிகள் வழங்கும் நிறுவனங்கள்

Red Cross


St. John Ambulance

     நன்றி

         

 


Post a Comment

0 Comments

close